உள்ளூர்

2050ஆம் ஆண்டளவில் இலங்கையை முழுமையான அபிவிருத்தி மிக்க நாடாக மாற்றி அமைப்பதற்கு தேவையான பின்னணியும், திட்டமும் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

2050ஆம் ஆண்டளவில் இலங்கையை முழுமையான அபிவிருத்தி மிக்க நாடாக மாற்றி அமைப்பதற்குத் தேவையான பின்னணி மற்றும் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது மிகவும் சவால் மிக்க காரியமாகும். பல்வேறு அபிப்பிராயங்களை கொண்டவர்களுடன் மிகவும் பொறுமையுடனும், அவதானமாகவும் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சும், சிங்கப்பூர் வர்த்தக ஒன்றியமும் இணைந்து ஒழுங்கு செய்த இலங்கை - சிங்கப்பூர் வர்த்தக சங்கத்தின் கேள்வி பதில் நிகழ்வில் இணைந்து கொண்டு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

சிங்கப்பூரின் ஜென் டெங்லின் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளைச் சேர்;ந்த பெரும் எண்ணிக்கையான தொழில்முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர். சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இதில் கலந்து கொண்டார். இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பூகோள அமைவிட முக்கியத்தும் நன்கு விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், பொருளாதார நிதி மற்றும் சமூக கேந்திர நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது நீண்டகால இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். நவீன தொழில்நுட்பத்துடன் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்காகக் கொண்ட சமூக முறையொன்றை கட்டியெழுப்ப இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. உலகின் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் கொள்கையாகும். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், கொரியா, ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளுடனான உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு, கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை நகரங்களை இணைக்கும் அதிவேக கட்டமைப்பின் மூலம் சுமார் 90 லட்சம் மக்கள் பயனடையக் கூடிய முதலீடு குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.