உள்ளூர்

கல்வியில் எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென்று ஜனாதிபதி உறுதி

சயிற்றம் கல்வி நிறுவனம் தொடர்பில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு நாட்டில் நிர்வாகத்தில் இருந்த எந்தவொரு அரச தலைவரும் பங்களிப்பையும், அர்பணிப்பையும் மேற்கொள்ளவில்லை. இந்த பிரச்சினை தீர்வுக்கு தாம் பெரும் அர்ப்பணிப்பை மேற்கொண்டாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் எந்தவொரு மாணவருக்கும் கல்வி தொடர்பில் அநீதி இடம்பெறக்கூடாது என்பதற்காகவே தாம் இவ்வாறு அர்ப்பணிப்பை மேற்கொண்டாக ஜனாதிபதி குறிப்பிட்டார். சயிற்றம் நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார். கொழும்பு நெலும்பொக்குண என்ற தாமரைக் தடாக கலையரங்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பல்வேறு அரசியல் சக்திகள், இந்த பிரச்சினையில் செயற்பட்டு அரசியல் நன்மைகளை பெற்றுக் கொள்ள முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் உரிய கவனத்தை செலுத்தி பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.

சயிற்றம் தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்ற மாணவர்களின் எதிர்காலம் குறித்து அக்கறை இல்லாமல் இருந்தால் தாம் 2015ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தை மூடியிருக்க முடியும் என்;று தெரிவித்தார். குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள், ஆர்ப்பாட்டங்கள் மத்தியில் சுமார் 3 வருட காலமாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டமை மாணவர்களின் நலனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டில் இலவச கல்வியை வலுப்படுத்தி அரசாங்க பாடசாலைகள் மற்றும் , பல்கலைக்கழகங்களுக்கு தேவையான அனைத்து மனிதவள மற்றும் பௌதீக வளங்களை பெற்றுக் கொள்வதற்கு சமகால அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. இதேபோன்று அரசு அல்லாத கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை மேற்கொண்டதாகவும், ஜனாதிபதி கூறினார்.

தனியார் கல்வி நிறுவனங்களில் இருக்க வேண்டிய தரம், ஒழுக்க விதிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. கொத்தலாவல வைத்தியபீடத்தில் உள்வாங்கப்பட்டுள்ள சயிற்றம் நிறுவனத்தின் மாணவர்களின் கல்வி நடடிவடிக்கை குறித்தும் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில் வைத்தியபீடத்தில் வசதிகள் மற்றும் ஏனைய தேவைகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சல்வா, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியல் அட்மிரடல் ஜே.ஜே.ரணசிங்க உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.