Fri11162018

Last updateTue, 13 Nov 2018 1pm

Latest News

நாட்டின் ஜனநாயக வரம்புகளுக்குள் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கூறுகிறார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் நடைமுறையை நாட்டின் சட்டவரம்பிற்கும், ஜனநாயக வரம்புகளுக்கும் உட்பட்டவாறு அரசாங்கம் முன்னெடுப்பதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடித்தல் என்பது, எவர் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால், துப்பாக்கியை கொண்டு சென்று அவரை சுட்டுக் கொல்வதல்ல. அதைத்தான் முன்னைய ஆட்சியாளர்கள் செய்தார்கள் என கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டார்.

சட்டவரம்புகளுக்கு உட்பட்டவாறு சந்தேகநபர்களுக்கு முறையாக வாய்ப்பளித்து, யார் குற்றவாளி என்பதை தீர்மானிப்பது அவசியம். தற்போது உரிய நடைமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன. பலர் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இந்த நடைமுறைகள் சரியாக பூர்த்தியடைய கால அவகாசம் தேவை என அவர் மேலும் கூறினார்.

யுனெஸ்கோவில் தஞ்சாவூர் ஆலயம் பற்றிய தமிழ் படைப்பை அரங்கேற்றி, வரலாறு படைக்கும் இந்திய நாட்டியத் தாரகை.

இந்தியாவின் முன்னணி பரதநாட்டியக் கலைஞரும், ஆராய்ச்சியாளருமான பாலாதேவி சந்திரசேகர் பரிஸ் நகரில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் தமது திறமைகளை வெளிக்காட்டி வரலாறு படைக்கவுள்ளார். இவரது பிந்திய படைப்பு நாளை யுனெஸ்கோ தலைமையகத்தில் அரங்கேறவுள்ளது. அருவத்திலிருந்து உருவத்தை நோக்கி : தேவரடியாளின் பார்வையில் பிரகதீஸ்வரர் என்ற தொனிப்பொருளில் அவரது நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய உலக மரபுரிமை ஸ்தலத்தை மையமாகக் கொண்ட தமிழ் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரில் ஜேர்மன் அதிர்ச்சி தோல்வி - சுற்றுத்தொடரிலிருந்தும் வெளியேற்றம்.

உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் நடப்புச் சம்பியனான ஜேர்மன் தென்கொரியாவின் முன்னிலையில் தோல்விகண்டு, சமகால சுற்றுத்தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் வரலாற்றை பொறுத்தவரையில் இது மிகப் பெரிய அதிர்ச்சியாகும் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய போட்டியில் தென்கொரிய வீரர்கள் ஜேர்மனியை இரண்டுக்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் தோற்கடித்தார்கள். சுவிட்சர்லாந்து, கொஸ்தாரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை போட்டிருந்தன. பிரேஸில் சேர்பியாவை இரண்டுக்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. மெக்ஸிக்கோவுக்கு எதிரான போட்டியில் சுவீடன் மூன்று கோல்களை போட்டு வெற்றியீட்டியது. இன்று முதற் சுற்றுக்குரிய நான்கு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

பொசொன் போயா தினத்தை முன்னிட்டு மத அனுஷ்டானங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

பொசொன் போயா தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் அமைந்துள்ள வெஹர விஹாரைகளில் நாளை பல்வேறு மத அனுஷ்டானங்கள் இடம்பெறவிருக்கின்றன.

பொசொன் போயா தினத்தன்று பத்து லட்சம் அடியார்கள் அனுராதபுரம் புனிதப் பிரதேசத்திற்கு செல்வார்கள் என அனுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அடியார்களுக்குத் தேவையான சகல வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 200க்கும் அதிகமான தான நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை, இரண்டாயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று காலை மூன்று ரயில்கள் கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளன. நாளைய தினத்திலும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக ஒப்பந்தம் பற்றி மஹா சங்கத்தினருக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

இலங்கைக்கும், சிங்கப்பூருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் பற்றி விளக்கம் அளிக்கும் கடிதத்தை அமைச்சர் மலிக் சமரவிக்ரம மஹா சங்கத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த ஒப்பந்தம் பற்றி கூட்டு எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

ஒப்பந்தத்திற்கு சட்ட மாஅதிபரின் மேற்பார்வை அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து இறுதிச் சட்டமூலம் ஜனவரி மாதம் 14ஆம் திகதி அமைச்சரின் அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது. இலங்கைக்கு வர்த்தகக் கொள்கை கிடையாதென தவறான கருத்து பரவுகிறது. 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரத்தோடு புதிய வர்த்தக் கொள்கை நிறைவேற்றப்பட்டது. அரச நிறுவனங்கள், கைத்தொழில் சங்கங்கள் உட்பட சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்புடைய சகல துறைகளினதும் கருத்துக்கள் இதற்காக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

பிரகீத் எக்னெலிகொட எல்ரிரிஈ அமைப்பினருடன் தொடர்பு வைத்திருந்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அவரது மனைவி நிராகரித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட எல்ரிரிஈ அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களின் மூலம் தமக்கு எதிராக சேறு பூசும் முயற்சிகள் இடம்பெற்றதாகவும், அதுபற்றி தாம் கவலை அடைவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவரது மனைவி கருத்து வெளியிட்டார்.

நுவரெலியாவில் சிறுத்தையொன்று உலாவுவதாக பிரதேசவாசிகள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.

நுவரெலியா கல்வேஸ்-லேன்ட் பிரதேசத்தில் சிறுத்தையொன்று நடமாடுவதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள். இந்த சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான போனியொன்றின் உடற்பாகங்களும் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிறுத்தையை பிடிப்பதற்கு வனஜீவராசிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

கிளிநொச்சியில், சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

கிளிநொச்சியில் அண்மையில் சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட காணொளிக் காட்சியை பரிசோதனை செய்து, இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் பிரிஸ்டவுணில் நடைபெறும் 3வது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் இன்று

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் பிரிஸ்டவுணில் நடைபெறும் 3வது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும். நேற்றைய தினம் ஆட்டம் நிறைவடைந்த வேளையில் தனது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சுரங்க லக்மால் மற்றும் கசுன் ரஜித தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினார்கள்.

பாலஸ்தீன அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்; - டிரம்பின் ஆலோசகர் பேட்டி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்காவின் கணவர் ஜாரெட் குஷ்னெர் பலஸ்தீனத்துடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் பலஸ்தீன நாட்டிலிருந்து வெளியாகும் 'அல் குட்ஸ்' என்ற செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீன அதிபர் அப்பாஸ் விரும்பினால் அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேட்டி அரபு மொழியில் வெளியாகி உள்ளது. ஒளிமயமான எதிர்காலம் அமைய நீங்கள் தகுதியானவர். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஆகிய இரு நாட்டு மக்களும் தங்களது தலைமையை வலிமைப்படுத்தும் நேரமிது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு தீர்வை நோக்கிய விடயத்தில் கவனம் செலுத்துவதற்கு பொருத்தமான நேரம் இது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருகமனான் ஜாரெட் குஷ்னெர்  தெரிவித்துள்ளார்.

'என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா' வேலைத்திட்டத்திற்காக இந்த வருடத்தில் 50 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை ஒதுக்கீடு

'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' என்ற வேலைத்திட்டத்திற்காக 50 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதன் கீழ் பெற்றுக் கொள்ளப்படும் கடனுக்கு அறவிடப்படும் வட்டியில் பெருந்தொகையை அரசாங்கம் செலுத்தும். புதிய தொழில்

Read more...

'கம்பெரலிய' என்ற கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு, 200 மில்லியன் ரூபா நிதி

'கம்பெரலிய' என்ற துரித அபிவிருத்தி வேலைத்திட்டம் விரிவான முறையில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் மொனராகலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக, முன்னெடுக்கப்படும் கிராம சக்தி வேலைத்திட்டம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கிராம வீதிகளை சீர்செய்யும் வேலைத்திட்டம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

'கம்பெரலிய' வேலைத்திட்டத்திற்காக 64 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், 200 மில்லியன் ரூபா நிலையான வேலைத்திட்டங்களுக்காக ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இலக்கம் 12ன் கீழ் கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்வரும் இரண்டு வருடங்களில், கிராமங்களில் உள்ள 4 ஆயிரம் குளங்கள் புனரமைக்கப்பட உள்ளன. வாராந்த சந்தைகளை நவீனமயப்படுத்தல், மத வழிபாட்டுத் தலங்களைப் புனரமைத்தல் முதலான பணிகளும் இதன் கீழ் இடம்பெறும். இதேபோன்று, அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பசுமைப் பூங்கா அமைக்கப்படும். இதில் வை-பை இணையத்தள வசதிகளும் வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக ஒரு நூலகம், உடற்பயிற்சி மத்திய நிலையம், மத வழிபாடுகளுடன் கூடிய யோகா தியான நிலையமும் அமைக்கப்படும். தொழில்துறை தொடர்பான மத்திய நிலையமும் இந்தப் பூங்காவில் அமைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

'கம்பெரலிய' வேலைத்திட்டத்தின் அடிப்படை வேலைத்திட்டமாக ஜுலை மாதம் 1ம் திகதி முதல் மொனராகலை மாவட்டத்தில் இயற்கை கழிவறை வசதியற்ற 25 ஆயிரம் குடும்பங்களுக்கு அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன. கிராமத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை நோக்கி பொதுமக்களின் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கான ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அபிவிருத்தித் திட்டத்திற்கு அனைவரது ஒத்துழைப்பையும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

தொற்றா நோய், இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும், பாரிய பிரச்சினை என்று, சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

தொற்றா நோய் இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பாரிய பிரச்சினையாகும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எமது நிலையத்தில் இடம்பெற்ற 'சுபாரதி' நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டார். இலங்கை வைத்தியர் சங்கத்திற்கு 131 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவனி மற்றும் ஓட்டப்போட்டி ஒன்றும் இன்று கொழும்பில் இடம்பெற்றன.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து நடைபவனி ஆரம்பமானது. அங்கிருந்த இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, தொற்றாத நோயைக் கட்டுப்படுத்துவதில் சுகாதார அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை வைத்தியர் சங்கம் இதற்காக இணைந்து அமைச்சுடன் செயற்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

புகையிலைப் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. சீனி உடம்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, சீனியற்ற பானங்களை அறிமுகப்படுத்துவதற்கு இத்துறையில் ஈடுபட்டுள்ளோர் முயற்சித்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் சேனாரத்ன கூறினார். உலக சுகாதார அமைப்பின் 200 மில்லியன் அமெரிக்க டொலரின் கீழ் மேலும் சுகாதார பரிசோதனை வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வீதி மின்குமிழ்கள,; முகாமைத்துவம் தொடர்பான தேசிய வேலைத்திட்டம்

நாட்டின் வீதி மின்குமிழ்கள் தொடர்பான தேசிய திட்டமொன்று வகுக்கப்பட உள்ளது.

இந்த வருட இறுதிக்கு முன்னர், இதனை நடைமுறைப்படுத்த பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

பிரதேச பொதுமக்கள் ஆலோசனை தொடர்க் கூட்டங்கள் பல இடம்பெறவுள்ளன. அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில், 9 ஆலோசனைச் சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இது தொடர்பாக. ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் கருத்து வெளியிட்டார்.

இந்தப் பிரதேச ஆலோசனைச் சேவைகளில் குடிநீர் மற்றும் எரிபொருள் பாவனை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். இவற்றைக் கவனத்திற்கொண்டு அதற்குத் தேவையான சிபார்சுகளைச் சமர்ப்பிப்பதற்கும் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்கள், இவ்வருடத்தில் நிரந்தர சேவையில் உள்ளீர்ப்பு

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இவ்வருடத்தில் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இதற்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்படுவதுடன், மேன்முறையீடுகளும் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக தொழிலற்றிருக்கும் 10 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளும் பணியும் இவ்வருடம் இடம்பெறும். இந்த வருடத்தில் இதுவரையில் ஆயிரத்து 127 பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம கூறினார். இதேபோன்று 365 ஆங்கில மொழி ஆசிரியர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தொழில்முயற்சியாளர் சொர்க்கத் திட்டத்தின் கீழ், தொழின்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கடனுதவித் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையை தொழில்முயற்சியாளர்களின் சொர்க்கமாக மாற்றும் நோக்கத்துடன் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தொழில்முயற்சியாளர் சொர்க்கத் திட்டத்தின் கீழ், தொழின்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கடனுதவித் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படும்.

இந்த விடயம் தொடர்பான பிரதான வைபவம் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் அமைச்சர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொள்வர். இன்றைய நிகழ்வில் குறைந்த வட்டியுடன் கூடிய 11 வகை கடனுதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி.

நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற சுபாரதி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக பொலிஸ் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் ஆலோசனைப் பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது. நாளாந்தம் இடம்பெறும் மோட்டார் வாகன விபத்துக்களில் சராசரியாக எட்டு உயிர்கள் காவுக் கொள்ளப்படுகின்றன. பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் வீதி விபத்துக்கள் மூலமே இந்த உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன என்று திரு குணசேகர தெரிவித்தார்.

பாரிய அளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றம் அடுத்த மாதம்

 

பாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம் அடுத்த மாதம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். அவர் எமது நிலையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தகவல் அறிவித்தார்.

திருடர்கள் பிடிக்கப்படுவதில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். ஆனால். திருடர்கள் பிடிக்கப்படுகிறார்கள். விசாரிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எதிராக முறையாக வழக்கு தொடுத்து சாட்சிகளின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டிய தேவை உள்ளது. இதனை பொதுவான நீதிக் கட்டமைப்பில் செய்ய முடியாது. இதற்காகவே விசேட நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. முதல் நீதிமன்றம் ஜூலை இரண்டாம் வாரம் இயங்கத் தொடங்கும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் விருப்பத்தெரிவு வாக்களிப்பு முறைக்கமைய டிசெம்பர் மாதத்தில்

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறைக்கு அமைய நடைபெறுமென அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்குரிய திருத்தப் பிரேரணை செப்டெம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. டிசம்பர் மாதம் அளவில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்குமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அவர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார். இந்த மாநாடு நேற்று இடம்பெற்றது.

நான்கு மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளையும், நாளை மறுதினமும் கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது. 600 பேர் கொண்ட குழு இது தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படவிருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டார்கள். இதில் 23 பேர் மரணமடைந்ததாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் டொக்டர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலைகளிலிருந்து வட் வரி நீக்கப்படுகின்றமை பற்றி மருத்துவ சங்கங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளர்களிடமிருந்து அறவிடப்படும் வட் வரியை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நீக்க எடுத்துள்ள நடவடிக்கை பற்றி மகிழ்;ச்சி அடைவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார சேவையை மேலும் ஊக்குவிக்க இது உதவும். சுயாதீன மருத்துவ நிபுணர்கள் சங்கம், பல்கலைக்கழக மருத்துவ நிபுணர்கள் சங்கம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்பனவும் இதுபற்றி பாராட்டு தெரிவித்துள்ளன. நாட்டின் மொத்த சனத்தொகையில் 45 சதவீதமானோர் தனியார் மருத்துவ சேவையை நாடுகிறார்கள்.