Sri Lanka Brodcasting Corporation

Wed12192018

Last updateThu, 13 Dec 2018 1pm

About Tamil National Service

தேசத்தின் மூச்சுக்காற்றாக கலை கலாசாரங்கள் சமயவிழுமியங்களைக்காப்பாற்றிவரும் வானொலிகளின் முன்னோடியாக இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனம் அன்றும் இன்றும் என்றும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.


வெறும் பொழுது போக்கான அம்சங்களைத்தவிர்த்து நவீன தொழினுட்பத்துடனான ஓலிபரப்பாக பல்வேறு தரப்பினருக்கும் அன்றாடம் தேவைப்படும் தகவல்களை ஆலோசனைகளை மற்றும் தொழில், கல்வி , விளையாட்டு சார்ந்த விடயங்களை திரட்டிக் கொடுக்கின்ற சேவையாக தமிழ்த்தேசியசேவை திகழ்கின்றது.


நாட்டின் கலை கலாசார சமய விழுமியங்களை பேணுகின்ற நிகழ்ச்சிகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வைபவங்கள்,விளையாட்டு நிகழ்ச்சிகள், ஆகியவற்றுடன் இந்து ,கிறிஸ்தவ, இஸ்லாம், பௌத்த நிகழ்ச்சிகள் தமிழ்ச்சேவையில் ஓலிபரப்பாகின்றன.

வரலாற்றுப்பின்னணி


மார்க்கோனியெனும் மாபெரும் ஆய்வாளரின் அரும்பெரும்முயற்சியினால் கண்டுபிடிக்கப்பட்ட வானொலியெனும் அதிசயக்கருவி உலகில் தகவல் பரிவர்த்தனைத்தொழில்நுட்பம் விரிவடையத்தொடங்கிய வேளையில் (முதலாம் உலகப்போர் காலப்பகுதியில்) இலங்கையில் இயங்கிவந்த வயர்லஸ்கழகம் இலங்கையில் வானொலிச்சேவை ஆரம்பிக்கப்படவேண்டும் என்று ஆட்சியாளருக்கு சிபார்சு செய்தநிலையில் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த எட்வர்ட் ஹார்ப்பர் தமது சக பொறியியலாளர்களின் துணையுடன் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம்திகதி அரைகிலோவட் ஒலிபரப்பி மூலம் கொழும்பு தந்தி அலுவலகத்திலிருந்து பரீட்சார்த்த ஒலிபரப்பு சேவையினை ஆரம்பித்து வைத்தார்.அதன்பின்னர் குறித்த பரீட்சார்த்த சேவை ஓரு கிலோவட் ஒலிபரப்பியாக விஸ்தரிக்கப்பட்டதுடன் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி உத்தியோகபூர்வ ஒலிபரப்பு சேவை இலங்கையில் ஆரம்பமானது.


அவ்வேளையில் இலங்கையில் பிரித்தானிய ஆளுநராக இருந்த திரு கிளிபேர்ட் இலங்கை வானொலிச்சேவையினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அன்றுமுதல் மக்கள் மிகவும் விரும்பிக்கேட்கும் தகவல் சாதனமாக வானொலி ஆரம்பமானது. இலங்கை வானொலி ஆரம்ப காலத்தில் சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஓரே அலைவரிசையில் ஒலிபரப்புக்களை மேற்கொண்டது.பின்னர் தனித்தனியாக அலைவரிசைகள் ஒதுக்கப்பட்டன. ஆரம்பகாலத்தில் செய்திகள் ஒலிபரப்பப்பட்டன.பின்னர் இசைநிகழ்ச்சிகள் கலை கலாசார சமய பண்பாட்டு பாரம்பரிய விழுமியங்களை பேணும் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.


இலங்கை வானொலி பல்வேறு மொழிகளிலும் சர்வதேச நேயர்களுக்கான தரமான நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது குறிப்பாக மலையாளம் ஹிந்தி தெலுங்கு கன்னட மொழிகளிலும் தமிழ்நாட்டு நேயர்களுக்கான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.

அன்று இலங்கை தந்தி அலுவலகத்திலிருந்து ஒலிபரப்பு சேவையினை ஆரம்பித்த இலங்கைவானொலி தற்போது கொழும்பு 07 சுதந்திர சதுக்க வளாகத்தில் தனது பிரதான நிலையக்கலையகத்தினை கொண்டுள்ளது.

றேடியோ சிலோன் என்ற பெயரில் இயங்கி வந்த இலங்கை வானொலி 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனமாக மாறியபின் ஓலிபரப்புத்துறையில் பல வகையிலும் வரலாறுகள் படைத்து தனது அளப்பரிய சாதனையினை நிலைநாட்டியது.


மக்கள் விரும்பும் விதத்தில் பல நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்கிய இலங்கை வானொலியானது பிராந்திய சேவைகளையும் ஆரம்பித்து வைத்தது. தொழினுட்பம் குன்றிய காலகட்டத்திலும் மக்கள் மனம் கவரும் வகையிலான நிகழ்ச்சிகள் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் ஒலித்தன.

இசைக்கச்சேரி, நாடகம், நேரடி அஞ்சல் ,சஞ்சிகை நிகழ்ச்சிகள், சிறுவர் மற்றும் பெண்களுக்கான நிகழ்ச்சிகள், இயல், இசை , முத்தமிழ் படைப்புக்கள் பற்றிய பயன்பெறு நிகழ்ச்சிகள் என்பனவற்றுடன் அறிவுபூர்வமான கேள்விபதில் நிகழ்ச்சிகளோடு மகிழ்ச்சியூட்டும் பல நிகழ்ச்சிகளையும் நேயர்களுக்கு வழங்கிய பெருமை இலங்கை வானொலியினை சாரும்.

TNS Listen Live